வைஸ் அட்மிரல்
டேமியன் பெர்னாண்டோ
RSP, USP, rcds, MA in International Security & Strategy (UK), MSc (DS) Mgt, AFNI, JP (Whole Island)
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் கௌரவ ஜனாதிபதியும் முப்படைத் தளபதியுமான அநுர குமார திஸாநாயக்க அவர்களால், ரியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, வைஸ் அட்மிரல் தரத்திற்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டதன் பின்னர், 2026 ஜூலை 01 அன்று இலங்கை கடற்படையின் 27-வது கடற்படைத் தளபதியாகப் நியமிக்கப்பட்டார். கடற்படையின் தலைமைப் பொறுப்பிற்கு வருவதற்கு முன்னதாக, அவர் 2024 டிசம்பர் 31 முதல் கடற்படையின் தலைமை அதிகாரியாகப் (Chief of Staff) பணியாற்றி வந்தார்.
வென்னப்புவ புனித ஜோசப் வாஸ் கல்லூரியின் முன்னாள் மாணவரான வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, 1991 ஆம் ஆண்டு 21வது மாணவச் சிப்பாய் அதிகாரி ஆட்சேர்ப்பைச் சேர்ந்த (21st Intake) மாணவச் சிப்பாய் அதிகாரியாக இலங்கை கடற்படையின் நிறைவேற்றுப் பிரிவில் இணைந்தார். திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்து, 1993 ஆம் ஆண்டு Acting Sub Lieutenant அதிகாரியாகப் பதவியேற்ற அவர், அங்கு 'தொழில்நுட்பப் பாடங்களில் அதிகூடிய மொத்த மதிப்பெண் பெற்ற அதிகாரி' (Highest Aggregate in Technical Subjects) மற்றும் 'சிறந்த குறிபார்த்து சுடுபவர்' (Best Marksman) ஆகிய இரண்டு கௌரவ விருதுகளை வென்றார். மேலும், 1995 ஆம் ஆண்டு திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் தொழில்நுட்பப் பாடநெறியை வெற்றிகரமாக நிறைவு செய்த அவர், 2003 ஆம் ஆண்டு இந்தியாவின் ஐஎன்எஸ் துரோணாச்சாரியா (INS Dronacharya) பயிற்சிப் பள்ளியில் ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் (Gunnery and Missiles) குறித்த நீண்ட காலப் பயிற்சியைப் பயின்று, அங்கு (Best All Round Officer) என்ற விருதினையும் பெற்றார். 2010 ஆம் ஆண்டு சீனாவில் கடற்படை ஆயுத பராமரிப்புப் பொறியியல் (Naval Gun Maintenance Engineer) பாடநெறியைப் பயின்ற அவர் தனது தொழில் முறை மற்றும் தொழினுட்ப நிபுனத்துவத்தை மேலும் மேம்படுத்திக் கொண்டார்.
ஐக்கிய இராச்சியத்தின் பாதுகாப்பு ஆய்வு நிறுவனத்தில் (RCDS) பாதுகாப்பு ஆய்வுகள் குறித்த பாடநெறியை வெற்றிகரமாக முடித்து, ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு ஆய்வுகள் குறித்த முதுகலைப் பட்டத்தையும் (MSc), லண்டனின் கிங்ஸ் கல்லூரியில் (King's College London) சர்வதேச பாதுகாப்பு மற்றும் மூலோபாயத்தில் முதுகலைப் பட்டத்தையும் (MA) பெற்றுள்ளார். ஹவாய் மாநிலத்தின் ஹொனலுலுவில் (Honolulu) அமைந்துள்ள ஆசிய பசுபிக் பாதுகாப்பு ஆய்வு மையத்தின் (Asia Pacific Center for Security Studies) கௌரவ முன்னாள் மாணவரான இவர், ஐக்கிய இராச்சியத்தின் நார்டிகல் நிறுவனத்தின் (Nautical Institute) இணை உறுப்பினராகவும் (Associate Fellow (AFNI) உள்ளார்.மேலும், வெளிவிவகார அமைச்சின் பயிற்சிப் பிரிவான பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திரப் பயிற்சி நிறுவனத்தினால் (Bandaranaike International Diplomatic Training Institute - BIDTI) நடத்தப்படும் பாதுகாப்பு ஆலோசகர் கற்கைநெறியை (Defence Attaché Course) வெற்றிகரமாக நிறைவு செய்து, பாதுகாப்பு இராஜதந்திரம் குறித்த நிபுணத்துவப் பயிற்சியைப் பெற்றுக்கொண்டார். இது தவிர, ஐக்கிய அமெரிக்காவின் கடற்படைப் போர்க்கல்லூரியினால் நடத்தப்பட்ட (Combined Force Maritime Component Commander) கற்கைநெறியையும் அவர் பூர்த்தி செய்துள்ளார்.
தனது தொழில் வாழ்க்கையில் படிப்படியாக பதவி உயர்வுகளைப் பெற்ற இவர், 2023 ஜனவரி 06 அன்று ரியர் அட்மிரல் தரத்திற்கும், 2026 ஜூலை 01 அன்று வைஸ் அட்மிரல் தரத்திற்கும் பதவி உயர்வு பெற்றார். 35 ஆண்டுகளுக்கும் மேலான தனது சேவை காலத்தில், இலங்கை கடற்படையில் பல்வேறு உயர் பொறுப்புகளை வகித்துள்ளார். அதன்படி, அதிவேகத் தாக்குதல் படகுகளின் கட்டளை அதிகாரி, இலங்கை கடற்படைக் கப்பல்கள் மற்றும் நிறுவனங்களின் கட்டளை அதிகாரி எனப் பணியாற்றியுள்ளார். மேலும், கடற்படை ஆயுத அதிகாரி, கடற்படை ஆயுதப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர், கடற்படையின் முக்கிய தாக்குதல் பிரிவுகளில் ஒன்றான நான்காவது அதிவேகத் தாக்குதல் படகுப் பிரிவின் கட்டளை அதிகாரி, செயற்பாட்டுத் திணைக்களத்தின் கெப்டன் (மேற்கு), கடற்படையின் முதன்மையான பயிற்சி நிறுவனமான திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் தளபதி,பணிப்பாளர் நாயகம் நபர்கள், வடமத்திய கடற்படை கட்டளையின் தளபதி, கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி மற்றும் கடற்படையின் பிரதித் தலைமை அதிகாரி ஆகிய பொறுப்புகளை வகித்த வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, கடற்படைத் தளபதியாக நியமிக்கப்படுவதற்கு முன்னர், 2024 டிசம்பர் 31 முதல் இலங்கை கடற்படையின் தலைமை அதிகாரியாக (Chief of Staff) பணியாற்றிய, இலங்கை கடற்படையின் கௌரவமிக்க சிரேஷ்ட அதிகாரியாவார்.
முப்பது வருடங்களுக்கும் மேலாக நாட்டில் நிலவிய பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான நடவடிக்கையில் தீவிரமாகப் பங்களித்து, எதிரிக்கு முன்னால் தளராத வீரத்தை வெளிப்படுத்தியமைக்காக 'ரணசூர' (RSP) பதக்கத்தாலும், சிறந்த சேவை, களங்கமற்ற நற்பெயர் மற்றும் கடமைக்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றிற்காக 'உத்தம சேவா' (USP) பதக்கத்தாலும் கௌரவிக்கப்பட்டுள்ள வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவிற்கு, அவரது சேவையைப் பாராட்டி ஏழு சந்தர்ப்பங்களில் கடற்படைத் தளபதிகளால் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், அகில இலங்கைக்கான சமாதான நீதவானாகப் பணியாற்றும் வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, இலங்கை கடற்படை கிரிக்கெட் அணியின் உறுப்பினராகவும் விளையாடியுள்ளதுடன், கடற்படை கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். பயணம் செய்தல், புகைப்படம் எடுத்தல், வாசிப்பு மற்றும் இசை ஆகியவை அவரது பொழுதுபோக்குகளாகும்.
வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ கௌசல்யா பெர்னாண்டோவை மணம் முடித்துள்ளதுடன், இத்தம்பதியருக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.













